ஈரான் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்துக்கான இரகசியம் அம்பலம்!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்கு அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜவத் ஷெரீப் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மீது குற்றம்
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானால் நவீன விமானங்கள் மற்றும் விமான பாகங்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்ய முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்கா செய்த குற்றங்களின் பட்டியலில் ஹெலிகாப்டர் விபத்தும் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய விமானப் போக்குவரத்து மீதான அமெரிக்கத் தடைகள் விபத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கொடூரமான பொருளாதார தடைகள்
"அமெரிக்காவின் கொடூரமான பொருளாதார தடைகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது எனவும், இந்த விபத்தின் பேரழிவில் அமெரிக்கா முக்கிய குற்றவாளிகளில் ஒன்றாகும் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் எல்லைகளுக்கு அருகே வடக்கு ஈரானில் உள்ள கலிபார் மற்றும் வார்ஸ்கானுக்கு அருகிலுள்ள கிராமப்புற மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட ஒன்பது பேரும் கொல்லப்பட்டதுடன், அவர்களின் உடல் நேற்றைய தினம் மீட்கப்பட்டது. உயிரிழந்த அனைவரின் இறுதிக் கிரியைகளும் இன்று இடம்பெறும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், ஈரான் ஜனாதிபதியின் மரணத்தை அடுத்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.