ஊடகவியலாளர் போன்று நடித்து திருட்டுகள் ; தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது!
ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மைதானத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை(12) இரவு சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஆடையகம் ஒன்றில் கடந்த நோன்பு காலத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த திருட்டு தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் உரிய ஆடையகத்தின் உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளித்திருந்தார்.
இதற்கமைய பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் இது தொடர்பில் கடையில் பொருத்தி இருந்த பாதுகாப்பு கமராவினை ஆராய்ந்த உரிமையாளர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளரை இனங்கண்டு கொண்டார்.
அதனையடுத்து பொலிஸாருக்கு சந்தேகநபர் தொடர்பான தகவல் வழங்கப்பட்டதும் பொலிஸார் சந்தேகநபரை வலைவீசி தேட ஆரம்பித்தனர்.
எனினும் தன்னை கைது செய்ய பொலிஸார் வருவதை அறிந்த குறித்த சந்தேக நபர் தனது அடையாளத்தை உருமறைப்பு செய்து ஊடகவியலாளர் போன்று பாவனை செய்து சுமார் 7 மாதங்களாக தலைமைறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வெள்ளிக்கிழமை(12) மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.
அங்கு சென்ற சந்தேநபர் ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார். இதேவேளையில் குறித்த போட்டிக்கு அதிதியாகச் சென்ற பிரபல ஆடையக உரிமையாளர் தனது கடையில் மேற்கொள்ளப்பட்ட திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர் தான் அவர் என்பதை இனங்கண்டார்.
உடனடியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்த நிலையில் அங்கு சென்ற சாய்ந்தமருது பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
மேலும் சந்தேக நபரை கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.