யாழ். வீதியில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்
யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் நேற்றைய தினம் (18.10.2025) சனிக்கிழமை மாலை யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண்ணொருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள், பெண்ணின் சங்கிலியை அறுத்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.
குறித்த சம்பவம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிகள் அடிப்படையில், காவல்துறையினர் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
அத்துடன், கொள்ளையர்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் அடையாளம் கண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.