தமிழர் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக மோசமாக காணப்படும் வீதிகள்.!
முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்று (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர்.
முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1,2,3 குறுக்கு வீதிகள் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாததனால் உள்ளது.
குறித்த வீதிகள் மழைக்காலங்களில் மட்டுமல்ல ஏனைய காலங்களிலும் குறித்த வீதி குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றது.
குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு பல ஆண்டுகளாக அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது,
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தும் இதுவரை புனரமைக்கப்படவில்லை. குறித்த வீதியில் அதிகமாக மாற்றுதிறனாளிகள், சிறுவர்கள் இருக்கின்றனர்.
அவர்கள் அவசர மருந்து தேவைக்கோ, பாடசாலைக்கோ பயணிக்க முடியாத நிலை இருக்கின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இந்நிலையில், எமது வீதிகளை பிரதேச சபையோ, மாவட்ட செயலகமோ, தற்போதுள்ள அரசாங்கமோ கவனத்தில் எடுத்து அதனை புனரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.