இலங்கைக்கு வந்த 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ள அவலம்! பிரதி அமைச்சர் தகவல்
கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இலங்கைக்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு Janith Ruwan Kodituwakku தெரிவித்துள்ளார்.
ஒருகொடவத்தை RCT முற்றத்தில் இன்றையதினம் (15-01-2025) கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் விவாதித்து உடனடி தீர்வுகளைக் காண, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 12-01-2025 ஆம் திகதி சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடினார்.
இதன்போது, சுங்க அதிகாரிகள் வாரத்தில் 7 நாட்களும், 24 மணித்தியாலமும் வேலை செய்ய ஒப்புக்கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அனுமதி வழங்கும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், ஒருகொடவத்தை சுங்க முற்றத்திற்கு அருகில் வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வு முகவர்கள் சங்கம், அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இந்த செயல்முறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் 24 மணித்தியால சேவையை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.