வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வீதித்தடைகள் தொடர்பில் விசனம்
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா நாளை (9) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நிலையில் இராணுவச் சோதனைச் சாவடிகள் போல் ஆலயச்சூழலில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நாளையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் உள்ளநாட்டு பகதர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலிருந்து நல்லூர் கந்தனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்மரம்
இந்நிலையில் தற்போது திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் ஆலய முன் வீதியில் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமான முறையில் நடந்து செல்லவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மாற்றுத் திறனாளிகள் பாதைகளை உபயோகிக்க முடியாதவாறும் இராணுவச் சோதனைச் சாவடிகள் போன்ற அமைப்பையுடைய புதிய வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை கடந்த வருட நல்லூர் உற்சவத்தின் போது ஏற்பட்ட சனநெரிசலில் பக்தர்கள் பலர் மூச்சுத்தின்றல் உட்பட பல ஆபத்துக்களை எதிர்கொண்டதால் பின்னர் வீதித்தடைகள் தளர்த்தப்பட்டு முன்வீதியில் மாற்றுத்திறனாளிகள் பயண்படுத்தும் வகையில் பொலிஸார் வீதித் தடைகளை அப்புறப்படுத்தியிருந்தனர்.
எனினும் இம்முறை புதிதாக இராணுவ முகாம் தடைகள் போன்று வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் ஆலய பின்பக்கமாக பருத்தித்துறை வீதி முழுவதுமாக இம்முறை மறிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் போய்வருவதற்கான பாதை இல்லாமல்உள்லதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
எனவே யாழ்ப்பாணத்தில் மணி மகுடமாய் திகழ்கின்ற அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தனை காண புலம்பெயர் தேசங்களில் இருந்தும், இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்கள் இடையூறின்றி நல்லைக்கந்தனின் அருளாசியை பெற்று வழிபட யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் பொஸிஸார் செயற்படவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.