ரத்மல்ஓயா அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம்
புத்தளம் மாவட்டம் நாத்தாண்டிய, நாராவில ஊடாகப் பாயும் ரத்மல்ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து கரையோரங்களை அரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வரப்பிரசாதமாகத் திகழும் இந்த ஆறு, தற்போது பெய்துவரும் அடைமழையினால் நிரம்பி வழியும் அபாயத்தை எட்டியுள்ளது.
நாராவில பகுதியில் ரத்மல்ஓயா அணைக்கட்டு (‘கதுருகஸ்பெம்ம’) ஊடாகப் பெறப்படும் நீரைக் கொண்டு சுமார் 450 ஏக்கர் நிலங்கள் விவசாயச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்பகுதியின் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில், வடமேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் விசேட வான்பாயும் (spillway) கட்டமைப்பு ஒன்று அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதன் இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பெய்த கடும் பெருமழையினால், ஆற்று வெள்ளம் அணைக்கட்டிற்கு அருகாமையிலுள்ள ஆற்றுப் படுக்கையை வேகமாக அரிக்கத் தொடங்கியது.
இந்த மண் அரிப்பு தீவிரமடைந்து அணைக்கட்டு உடையும் பட்சத்தில், நாராவில, தும்மோதர, கொட்டாரமுல்ல உள்ளிட்ட பல கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகப் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரித்தது.
இதனையடுத்து, அணைக்கட்டைக் காப்பாற்றி மக்களைப் பாதுகாக்கும் அவசர நடவடிக்கையாக, மாதம்பை இராணுவ முகாமின் 57 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 7 ஆவது கஜபா படையணிச் சிப்பாய்களும், உள்ளூர் கிராம மக்களும் இணைந்து இரவு பகலாக மணல் மூட்டைகளை அடுக்கி வெள்ளத்தின் ஆக்ரோஷத்தைத் தடுத்து நிறுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்ட இத்தூரித நடவடிக்கையால் கிராமங்கள் உடனடிப் பேராபத்திலிருந்து தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தொடரும் மழைக் காரணமாக மணல் மூட்டை அரண்களையும் தாண்டி நீர் பாயக்கூடும் என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த அணைக்கட்டுக்கு உடனடியாக நிரந்தரக் கொங்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.