கொள்கலன் கையாளுதலில் 10 சதவீத வளர்ச்சி ; சர்வதேச தரவரிசையில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம்
சர்வதேச கொள்கலன் துறைமுகங்களுக்கான அல்பாலைனர் (Alphaliner) தரவரிசையில் 26ஆவது இடத்திலிருந்து 20ஆவது இடத்திற்கு முன்னேறி கொழும்பு துறைமுகம் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 5,825,909 கொள்கலன்கள் கையாளப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு அதே காலப்பகுதியில் 6,406,363 கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 580,454 கொள்கலன்கள் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 10 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 620,830 கொள்கலன்கள் கையாளப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 680,125 ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.6 சதவீத வளர்ச்சியாகும். கொள்கலன் கையாளும் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர்ச்சியான அதிகரிப்பின் பிரதிபலிப்பாக, கடந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச தரவரிசையில் 26ஆவது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், தற்போது 20ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச தரவரிசையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், நாட்டின் கடல்சார் வர்த்தகம் மற்றும் துறைமுகச் செயற்பாடுகளின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.