கடல் கொந்தளிப்பாகும் அபாயம் ; கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்பிலும், சிலாபம் முதல் புத்தளம் வரையான கடற்பரப்பிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் படகுப் பயணங்களில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு முதல் காலி வரையிலும், காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடலில் நிலவும் வானிலை மற்றும் காற்றின் நிலைமைகளை அவதானித்து, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் பயணங்களில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.