பாறைகள் சரிந்து விழும் அபாயம் ; கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு
நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், கொழும்பு–கண்டி பிரதான வீதி கடுங்கன்னாவ மற்றும் கணேதென்னா பகுதிகளுக்கு இடையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந் நிலையில் மறு அறிவிப்பு வெளியாகும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற வானிலை
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
, பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதன்காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மண்மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர்.
நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரம் கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.