மறு அறிவித்தல் வரை பேராதனைப் பல்கலைக்கழக நடவடிக்கை இடைநிறுத்தம்
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், மாணவர்களது மற்றும் ஊழியர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான காலநிலை
அத்துடன் மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வளாகத்திலுள்ள அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எந்தவிதத் தடையுமின்றித் தொடர்ந்து செயற்படும் என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பாகத் தமது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கக் கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான காலநிலை காரணமாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத மாணவர்கள், சலசல மெதுர (Sarasavi Medura) விடுதியைத் தவிர ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், சம்பந்தப்பட்ட விடுதி அதிகாரிகளுக்குத் அறிவித்த பின்னர் தங்கியிருக்கலாம்.
எந்தவொரு மாணவரும் தங்களது விடுதி வசதியை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் வளாகத்தில் தற்காலிகத் தங்குமிடம் கோரினால், அவர்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தகைய மாணவர்களுக்குத் தங்குமிட வசதியை வழங்குமாறும், தேவையான பதிவுகளைப் பேணுமாறும் விடுதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.