எச்சரிக்கை மட்டத்தை அடையும் வெப்பம் ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (28) பகல் வேளையில் கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் (Heat Index) 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்ச வெப்பநிலை
சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கணக்கிட்டே இந்த வெப்பச் சுட்டெண் தீர்மானிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மனித உடலுக்கு உணரப்படும் உண்மையான வெப்பநிலையைக் குறிக்கிறது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பது அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடற்சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடும்போது தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.