காலியில் வாகன விபத்து ; ஆணும் பெண்ணும் உயிரிழப்பு
காலி, அம்பலன்வத்தை அனகாரிக தர்மபால மாவத்தையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து
விபத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதில், அதன் பின்னாசனத்தில் பயணித்த 59 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 49 வயதுடைய ஆண் பலத்த காயங்களுடன் காலி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கனம்பிட்டியைச் சேர்ந்த பெண்ணும், ஹீன்பந்தலையைச் சேர்ந்த ஆணுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.