ரிஷாட்டின் சிறையில் சிக்கிய தொலைபேசி!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கைப்பேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ரிஷாட் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கைப்பேசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ரிஷாட் பதியுதீன் அடைக்கப்பட்டிருந்த சிறையை தலைமை ஜெயிலரும் மற்றொரு சிறைக்காவலரும் நெருங்கியபோது, அவர் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை அவதானித்ததாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அதன் பின்னர் ரிஷாட் பதியுதீன் குறித்த கைபேசியை வெளியே எறிந்தார் என்றும் குறித்த கைத்தொலைபேசி சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
சிறைச்சாலை கட்டளையின் கீழ் கைதி ஒருவர் தனது கைபேசியை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், எனவே ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவியதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.