அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 2 நாட்களில் பல கோடி ரூபாய் வருமானம்
நாட்டிலுள்ள அதிவேகப் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும், இதன் மூலம் 124.57 மில்லியன் ரூபாவுக்கும் (12.45 கோடி) அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களிலேயே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

வருமானம்
26ஆம் திகதி E01, E 02, E 03 மற்றும் E 04 ஆகிய அதிவேகப் பாதைகளில் மொத்தம் 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 60.41 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.
இதில் E 01 மற்றும் E 02 பாதைகளிலேயே அதிகளவிலான போக்குவரத்து பதிவாகியுள்ளது.
இங்கு 97,149 வாகனங்கள் பயணித்ததன் மூலம் 35.61 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதேவேளையில், E 03 பாதையில் 45,942 வாகனங்கள் மூலம் 18.90 மில்லியன் ரூபாவும், E 04 பாதையில் 20,672 வாகனங்கள் மூலம் 5.90 மில்லியன் ரூபாவும் பெறப்பட்டுள்ளன.
27ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதன் மூலம் 64.16 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
இது முந்தைய நாளை விடச் சுமார் 3.75 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும். அன்றைய தினம் E 01 மற்றும் E 02 பகுதிகளில் 102,027 வாகனங்கள் மூலம் 41.14 மில்லியன் ரூபாவும், E 03 பகுதியில் 35,004 வாகனங்கள் மூலம் 15.99 மில்லியன் ரூபாவும், E 04 பகுதியில் 24,522 வாகனங்கள் மூலம் 7.03 மில்லியன் ரூபாவும் ஈட்டப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 325,316 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், ஒட்டுமொத்த வருமானமாக 124,574,925 ரூபா கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.