வடகொரியாவின் அதிரடி ; கிம் ஜாங் உன் கொடுத்த எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து பாரிய இராணுவப் பயிற்சியை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று (14) அதிரடியான ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகளும், வருங்கால வாரிசு எனப் பேசப்படுபவருமான கிம் ஜூ ஏ (Kim Ju Ae) ஆகியோர் முன்னிலையில், 600 மிமீ ரகத்தைச் சேர்ந்த 12 பல்குழல் ஏவுகணைகள் (Multiple Rocket Launchers) ஏவிச் சோதிக்கப்பட்டன.

பியாங்யாங் நகருக்கு அருகிலிருந்து மதியம் 1:20 மணியளவில் ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், சுமார் 350 கிலோமீட்டர் தூரம் பயணித்துக் கடலில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கின.
இந்தச் சோதனையின் போது பேசிய கிம் ஜாங் உன், "எதிரிகளின் நிலைகள் எமது 420 கிமீ தாக்குதல் எல்லைக்குள் இருப்பதை அவர்கள் உணர வேண்டும்.
தந்திரோபாய அணு ஆயுதங்களின் அழிவு சக்தியை அவர்களுக்குப் புரியவைப்பதே இந்த பயிற்சியின் நோக்கம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுமார் 100 சதவீதத் துல்லியத்துடன் இலக்குகளைத் தகர்த்ததாக வடகொரிய அரச ஊடகமான KRT தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரிய எல்லைக்கு அருகிலுள்ள யோன்சியோன் (Yeoncheon) பகுதியில் அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவின் இந்த ஏவுகணை வீச்சு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.