செம்மணி புதைகுழிக்கு ராஜபக்சவை அழைத்து வாருங்கள்; சிறிதரன் ஆவேசம்
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து, அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் . இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் பல பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்னர். அவர்களை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை அவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கிறார்கள்.
யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் , படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.
இதனை நாங்கள் சொல்லவில்லை; பாடசாலை மாணவியான கிரிசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருக்கிறார். ,
எனவே சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் செம்மணிக்கு அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும் என தெரிவித்தார்.