இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை!
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன Sanjeeva Edirimanna தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (12.10.2023) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இப்போது, ஒரு நாடாக நாமும் இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையிலான மிகக் கடுமையான இராணுவ மோதல் சூழ்நிலையில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றோம்.

இலங்கையர்களாகிய எங்களின் கவலை என்னவெனில், எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்.
அரசாங்கம் என்ற வகையில், தூதரக சேவைகளுடனான உறவுகளை 24 மணித்தியாலமும், புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் மூலம் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் தலையிட்டு வருகிறது.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொறுப்பான தூதரக சேவைகள் மற்றும் அதிகார அமைப்புக்கள் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றிடம் விசேட கோரிக்கையை விடுக்க இச்சந்தர்ப்பத்தில் நாம் விரும்புகிறோம். என தெரிவித்துள்ளார்.