ஜிம் போகாமலே எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பழக்கங்களை பின்பற்றுங்கள்
சில ஆரோக்கிய பழக்கங்கள் அன்றாட வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறிவிட்டால், எடை குறைவென்பது கிட்டத்தட்ட இயற்கையாகவே நிகழும்.
அந்தவகையில் நிலையான எடை இழப்புக்கு உதவும் சில முக்கிய மற்றும் எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை இங்கே காணலாம்

எளிய வாழ்க்கை முறை
கவனமாக சாப்பிடுங்கள்: எடையை குறைக்க முயற்சிக்கிறேன் என்ற பெயரில் மிகவும் குறைவாக சாப்பிடாமல் பசிக்கு ஏற்ப சாப்பிட வேண்டும். எளிமையாக சொல்வதென்றால் கவனத்துடன் சாப்பிட வேண்டும். போலவே சாப்பிடும்போது முழு கவனமும் உணவில்தான் இருக்க வேண்டும். உணவின் சுவை, வாசனையில் கவனம் செலுத்துவதுடன், உடலின் பசி மற்றும் நிறைவான உணர்வு குறித்த சமிக்ஞைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல மெதுவாக சாப்பிடுவது, அதிக உணவு சாப்பிடுவதைத் தடுக்கும். செரிமானத்தையும் எளிதாக்கும்.
ஒவ்வொரு உணவிலும் புரதம் இருக்க முன்னுரிமை: புரதம் வயிற்றில் நீண்ட நேரம் தங்கி தசை இழப்பைத் தடுக்கிறது, இதனால் எடை குறைவது என்பது எளிதாகிறது. எனவே புரதம் நிறைந்த உணவிற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுங்கள்.

நாள் முழுவதும் போதுமான நீர்ச்சத்துடன் இருங்கள்: உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது என்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு, நீர்ச்சத்து இழப்பை தடுக்கும். மேலும் உணவின் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கவனமற்ற துரித உணவுப்பழக்கத்தை தவிர்க்கவும் உதவும்.
தூக்கத்தின் தரம்: மோசமான தூக்கம் பசி ஹார்மோனைக் குறைத்து, பசியை மிகவும் அதிகரிக்க செய்யும். இதனால் எடை குறைப்பு முயற்சி சீர்குலையும். எனவே தினமும் இரவில் 7-8 மணிநேர தரமான தூக்கத்தை இலக்காக கொண்டு பின்பற்றுங்கள்.
குறைவான நேரமே உட்காருங்கள்: நீங்கள் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டியதில்லை. எளிதான பொழுதுபோக்கு, உடல் செயல்பாடுகள் கூட கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்காமல், அடிக்கடி ஸ்ட்ரெச் செய்யலாம் அல்லது படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம்.
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்து கொள்ளுங்கள்: சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் / உணவுகளை குறைத்து கொள்வது தேவையற்ற கலோரி நுகர்வை குறைக்கும். சிறந்த ஆரோக்கியத்தையும் அளிக்கும்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்: நீங்கள் என்ன சாப்பிட போகிறீர்கள் என திட்டமிட்டு அதனை உங்கள் டயட்டில் இடம்பெற செய்வது கவனமின்றி சாப்பிடும் உணவைத் தடுக்கவும், ஆரோக்கியமான உணவுகளைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து சாப்பிடவும் உதவும்.
சீரான உணவு அட்டவணை: தினசரி எப்போதும் ஒரே நேரத்தில் தொடர்ந்து சாப்பிடுவது உங்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். மேலும் அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்கவும் உதவும்.
ஆக மொத்தத்தில், எடை குறைப்பு என்பது ஒரு நீண்ட பயணம். சில நாட்கள் அல்லது வாரங்கள் மட்டுமே பின்பற்றுவேன் என்பது கூடாது. மேம்பட்ட ஆரோக்கியத்தை நோக்கிய இந்த பயணத்தில், நீடித்திருப்பதே அனைத்துக்கும் முதன்மை. எந்தவொரு எடை குறைவு பயணத்தின் உண்மையான வெற்றியும், பொறுமை மற்றும் சமநிலை மூலமே கிடைக்கும். சின்ன சின்ன வாழ்க்கைமுறை மாற்றங்களை கூட நீண்ட காலத்துக்கு செய்து வந்தால், நிலையான எடை இழப்பும் ஆரோக்கியமான நல்வாழ்வும் சாத்தியப்படும்.