சர்ச்சைக்குரிய பாடப்புத்தக விவகாரம் ; அறிக்கை சமர்பிக்கப்பட்டது
புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module), தகாத இணையத்தளம் ஒன்றைக் குறிக்கும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத், அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

தகாத இணையத்தளம்
புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழித் தொகுதியில் தகாத இணையத்தளம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் விநியோகம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.
குறித்த தொகுதியில் தகாத இணையத்தளப் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது. சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்தப் பாடத் தொகுதி தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்டதுடன், ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்தார். வெளித்தரப்பொன்றின் சதித்திட்டத்தின் மூலம் இதனைச் சேர்த்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகச் செயலாளர் கலுவெவ தெரிவித்திருந்தார்.
மேலும், இவ்வாறான அங்கீகரிக்கப்படாத செயலைச் செய்ததற்குப் பொறுப்பான நபர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இது இறுதி அச்சிடப்பட்ட பதிப்பு அல்ல எனவும், இதன் முழுப் பொறுப்பும் கல்வித் திணைக்களத்தையே சாரும் எனவும் தெளிவுபடுத்திய செயலாளர் கலுவெவ, இந்த வெளியீடு எந்த வகையிலும் சட்டரீதியாக இறுதி செய்யப்படவில்லை என வலியுறுத்தினார்.
இதேவேளை, சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலத் பாடத் தொகுதி தொடர்பான விசாரணை முடியும் வரை, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா வித்தானபதிரன தமது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.