ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு ; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி, இன்று செவ்வாய்க்கிழமை (13) காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஐந்து முக்கிய கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இதில் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட பிள்ளையான், தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
இதனிடையே, காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகப் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக 2026ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குறித்த வழக்கு இன்று திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிள்ளையான் காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விசாரணையின் முடிவில், பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், பிரித்தானியாவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் ‘பொலிஸ் பாய்ஸ்’ என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.