AI மூலம் போலிப் புகைப்படம் ; விமல் வீரவன்சவுக்கு சதுரங்க அபேசிங்க கடும் கண்டனம்
தொலைக்காட்சி விவாதமொன்றின்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியாக மாற்றியமைக்கப்பட்ட புகைப்படமொன்றைக் காட்சிப்படுத்தி கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு, பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள பிரதியமைச்சர், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டத்தின்போது தங்களைப் பாதுகாத்த அமல் என்பவருடன் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தையும், அவர் பௌத்த துறவியைப் போன்ற தோற்றத்தில் இருப்பதாகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவர் இவ்வாறான போலியாக மாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தைப் பயன்படுத்தி ஊடகங்களில் தவறான அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வருத்தமளிப்பதாகப் பிரதியமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இனவாத மற்றும் மதவாதப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் விமல் வீரவன்ச மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் புகைப்படங்கள் பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த விவகாரம் முன்னிலைப்படுத்தியுள்ளது.