நிவாரணம் வழங்குவதில் அரசியல் அழுத்தம் ; கடும் விசனத்தில் கிராம உத்தியோகத்தர்கள்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகளினால் கிராம உத்தியோகத்தர்களால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை உருவாகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இவ்வாறான அரசியல் அச்சுறுத்தல்கள் தொடர்வதால் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

அனர்த்த நிலமை
இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்தி வரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
நிவாரணப் பணி மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்திவருவதில் அரசியல் தலையீட்டால் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட முடியாத இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.
கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கம் நிவாரண வழங்கும் செயற்பாடுகளையும் துரிதப்படுத்தியுள்ளது. எனினும் உரிய தரப்பினரிடம் நிவாரணங்களை கொண்டு சேர்க்கும் செயற்பாட்டில் கடந்த காலங்களை விட இம்முறை அரசியல் தலையீடுகளால் கிராம உத்தியோகத்தர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் அவ்வாறு அரசியல் அழுத்தங்களை தாம் எதிர்கொண்டதாக கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாடு பேரழிவை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மீது கவனம் செலுத்த நாம் தயாராக இல்லை.
எனினும் நிவாரணம் வழங்குவதில் தொடர்ந்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்களாயின், விருப்பம் இன்றியேனும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம் என்றார்.