சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனை தொடர்பில் வெளியான தகவல்
வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்கு வருகைத்தரும் 100 நோயாளர்களில் ஐவர் சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சருமநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் இந்திரா கஹாவிட்ட (Indira Kahawita) இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சட்டங்கள் கடுமையாக்கப்படாததால் பலர் இவ்வாறான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறெனினும் சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பாவனையாளர்கள் முறைப்பாடளிக்க முடியும்.
முறையான அனுமதி மற்றும் தர நிர்ணயம் இன்றி ஒருவரின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதும் குற்றச்செயலாகவே கருதப்படுகிறது என்றார்.
சமூகத்தில் அதிகரித்துள்ள சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனை தொடர்பில் நேற்று புதன்கிழமை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், சமீபகாலமாக பெண்களிடையே சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு மற்றும் ஊசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இலங்கையில் மாத்திரமல்ல எந்தவொரு நாட்டிலும் இந்த ஊசிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இவை சிக்கலான சருமநோய்கள் மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இளம் பருவத்தினர் முதற்கொண்டு வயது வந்த பெண்கள் வரை சரும களிம்புகளை உபயோகிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஆண்களும் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளனர். அரச வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்கு வருகைத்தரும் 100 நோயாளர்களில் 5 பேர் தோலை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்றார்.