இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் இன்றைய தினம் (டிசம்பர் 01) பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் ‘ரெட்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது நாளை (02) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (03) புயலாக வலுப்பெறவுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 9.5 வடக்கு அட்சரேகை மற்றும் 86.0 கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகாமையில் திருகோணமலையில் இருந்து சுமார் 550 கிலோமீற்றர் தொலைவில் மையங் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகிலிருந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ம் திகதி வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மேற்படி புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.