நாட்டில் சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு ; கொட்டி தீர்க்க போகும் மழை
நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக் கருத்தில் கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கான எச்சரிக்கையையும் கண்காணிப்புக் காலத்தையும் நீட்டித்துள்ளது.
திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையின்படி,
பொதுமக்கள் நவம்பர் 29ஆம் திகதி வரை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள சிவப்பு எச்சரிக்கை (Red Alert) நிலைமை இன்று (27) இரவு 10.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென் கிழக்கு திசையிலிருந்து வட மேற்கு திசை நோக்கி நகரும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், காற்றின் வேகமானது மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கடற்பகுதிகளில் தென் கிழக்கு முதல் வட கிழக்கு வரையான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காலி, களுத்துறை, கொழும்பு, புத்தளம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில், கடல் அலைகளின் உயரம் சாதாரண நிலையை விட 2.5 முதல் 3.5 மீட்டர் வரை உயரும் அபாயம் காணப்படுகிறது.
கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கடல் நடவடிக்கைகளில் (மீன்பிடி, கப்பல் போக்குவரத்து) ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உயரமான அல்லது அபாயகரமான சரிவுகளில் வசிப்பவர்கள் விசேட அவதானத்துடன் இருக்க வேண்டும். மக்கள் தமது பாதுகாப்புக் குறித்து உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.