40 வயதுக்கு மேல் தொப்பை கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணம் தெரியுமா?
30 வயதில் ஒருவர் தனது இளமையின் உச்சத்தில் இருக்கிறார். 40 வயதில், உடல் முதுமையை நோக்கி நகரத் தொடங்குகிறது, இதன் காரணமாக உடலில் பல தேவையற்ற மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன.
இதில் சரும நெகிழ்ச்சி இழப்பு மற்றும் உடலில் கொழுப்பு சேர்தல் போன்ற அறிகுறிகள் அடங்கும். குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகமாக சேர்ந்து விடுகிறது.
40 வயதில் தொப்பை கொழுப்பு பிரச்சினை, உடல் பருமன் இல்லாதவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
நடுத்தர வயதில் தெரியும் அறிகுறிகள்
ஆய்வின்படி, இந்த வயதில் உடலில் ஒரு குறிப்பிட்ட வகை கொழுப்பு செல்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதன் காரணமாக வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்குகிறது.
40 வயதுக்கு மேல் அதிகரிக்கும் தொப்பை கொழுப்பு மற்றும் எடை தொடர்பாக கண்டறிய எலிகள் கொண்டு சில ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில், மனிதர்களில் 40 வயதுக்கு சமமான 12 மாத எலிகளின் வயிற்றில், திடீரென கொழுப்பு உருவாகத் தொடங்கியது தெரியவந்தது. ஆய்வின் போது, நடுத்தர வயது மனிதர்களிடம் காணப்படுவதைப் போன்ற ஒத்த வடிவங்கள் எலிகளிலும் காணப்பட்டன.
அதிகரித்த இடுப்பு அளவு, குறைக்கப்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு. இந்த மாற்றங்கள் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை பிரதிபலிக்கின்றன. இவை பின்னர் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த கொழுப்பை CP-A என்று பெயரிட்டுள்ளனர். அதாவது வயதுக்கு ஏற்ப கொழுப்பு செல்களாக மாறத் தொடங்கும் ஒரு வகை செல்கள். இது நடுத்தர வயதில் வேகமாக உருவாகத் தொடங்குகிறது.
இதன் காரணமாக உடல் மெலிதாக இருந்தாலும், வயிற்றைச் சுற்றி கொழுப்பு தோன்றத் தொடங்குகிறது.
40 வயதிற்குப் பிறகு தொப்பையைக் குறைக்க, உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் சமநிலை மிக முக்கியம்.இதில், போதுமான தூக்கம், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.