பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? சுகர் முதல் பிபி வரை..
பூண்டை பச்சையாக உட்கொள்ளலாமா வேண்டாமா என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கவே செய்கிறது. இதனால் பலரும் இதன் நன்மைப் பற்றி தெரிந்துகொள்ளாமலே உள்ளார்கள்.
நாம் பொதுவாக உணவு சமைக்கும் போது பூண்டை வறுத்தோ அல்லது சுட்டோ பயன்படுத்துகிறோம். இதை பச்சையாக உட்கொள்ளலாமா வேண்டாமா என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கவே செய்கிறது.

பச்சை பூண்டின் நன்மைகள்
சமைத்த பூண்டில் கிடைக்காத சில ஆரோக்கிய நன்மைகள் பச்சையான பூண்டில் கிடைப்பதாகவும், அதேசமயம் எரியும் உணர்வு உட்பட சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சில ஆய்வுகள் அதன் சல்பர் சேர்மங்களின் முக்கிய நன்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
பச்சையாக சாப்பிடும்போது இதிலுள்ள நன்மைகள் எந்த சேதாரமும் இல்லாமல் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. குறைந்தது ஒரு மாதமாவது தினமும் சாப்பிட்டால், என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: பூண்டு நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். பூண்டில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளே இதற்கு காரணமாகும்.
இரத்த சர்க்கரை பராமரிப்பு: இரத்த சர்க்கரையை பராமரித்து மேம்படுத்துவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகப்பெரிய உதவியை செய்கிறது.

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது: உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவராக இருந்தால், பச்சை பூண்டை சாப்பிடும் போது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க கொழுப்பின் அளவைக் கூட இது குறைக்கும் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.
சருமத்திற்கு நல்லது: சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரின் முதல் தேர்வாக பூண்டு உள்ளது. இது முகப்பரு மற்றும் பிற தோல் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.
பச்சை பூண்டை எப்படி சாப்பிடுவது?
பூண்டை பச்சையாக சாப்பிடுவதற்கான சிறந்த வழி, அதை நசுக்கி அல்லது சிறியதாக நறுக்கிய பின்னர் சில நிமிடங்கள் அப்படியே வைத்துவிட வேண்டும். அப்போதுதான் அதில் அல்லினேஸ் நொதி அல்லிசினை உற்பத்தி செய்யும். பூண்டின் சுவையை மேம்படுத்த, சாலட், தயிர் அல்லது தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

பச்சை பூண்டு சாப்பிடுவதால் வரும் பக்க விளைவுகள்
பச்சை பூண்டு சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தாலும், சில சாத்தியமான பக்க விளைவுகளைளும் இதில் உள்ளதை மக்கள் நியாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கடுமையான சுவை மற்றும் மணம் காரணமாக, சாப்பிடுபவர்களின் சுவாசம் மற்றும் உடலில் இருந்து துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளது. உணர்திறன் வாய்ந்த செரிமான அமைப்பு உள்ளவர்கள் பொதுவாக பச்சை பூண்டை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். மேலும் இது இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுப்பதால், இரத்தப்போக்கு அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.