செம்மணி விவகாரத்தில் புதிய சர்ச்சை ; சந்திரிகாவையும் விசாரிக்க வேண்டும் என ரவிகரன்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக சோமரத்ன ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதியிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே ஊடாக, சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மூலம் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார் என்றார்.

அந்தக் கடிதம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அனுப்பப்பட்டதாகவும், அதில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாக எதனையும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பதாக ரவிகரன் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.