ராவணன் தொடர்பில் நடிகை சாய் பல்லவி கருத்து; சமூகவலைத்தளங்களில் காரசாரம்!
ராமாயணத்தில் வரும் ராவணன் முற்றிலும் தீயவன் அல்ல என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் , சாய் பல்லவி , யாஷ் நடித்துள்ள பிரம்மாண்டமான Ramayana திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 ஆம் திகதி வெளியாக உள்ளது.

ராவணன் முற்றிலும் கெட்டவன் இல்லை
சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்ட நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தனது கருத்துக்களை பகிர்ந்த சாய் பல்லவி, "ராவணன் முற்றிலும் கெட்டவன் இல்லை. நமக்குள் இருக்கும் ராவணனை அடையாளம் கண்டு, காலப்போக்கில் நம்மை மாற்றிக்கொள்வது முக்கியம்" என்று குறிப்பிட்டார்.
அத்துடன், ராமாயணத்திலிருந்து ஒவ்வொருவரும் நல்ல மற்றும் தீய குணங்களை ஆராய்ந்து தங்களின் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சாய் பல்லவியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையவாதிகள் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருவதால், இது தற்போது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.