மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவிப்பு!
நாரஹேன்பிட்டி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான இணையவழி நேர ஒதுக்கீட்டு வசதி எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, வாகனங்களைப் புதிதாகப் பதிவு செய்தல், வாகன உரிமையைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் வாகனங்கள் தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் முன்கூட்டியே இணையவழியில் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் இணையவழி நேர ஒதுக்கீட்டு முறைமை
திணைக்களத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு மிகவும் இலகுவானதும் வினைத்திறனானதுமான சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை முதல் திணைக்கள வளாகத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையைத் தவிர்க்கும் வகையில் இந்த இணையவழி நேர ஒதுக்கீட்டு முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
எனவே, குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் பொதுமக்கள் முன்கூட்டியே இணையவழியில் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.