இம்மாத இறுதியில் விடுதலை செய்யப்படும் அரசியல் பிரபலம்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்து ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்வதாக அறியமுடிகிறது.
இதன் காரணமாகவே, எதிர்க்கட்சியிடமிருந்து ஜனாதிபதி எழுத்து மூலமான கோரிக்கை கடிதமொன்றை கோரியுள்ளதாகவும், சஜித் தரப்பிலிருந்து கடிதமொன்று வழங்கப்பட்டதாகவும் அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை, ஆசிரியர்களின் சம்பள விவகாரம், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் விலையேற்றம் என அனைத்து வகையிலும் அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், ரஞ்சனின் விடுதலையின் ஊடாக பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் அரசாங்கம் இதன் மூலமாக முயற்சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.