ரணில் விக்ரமசிங்கவின் கைது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது ; அடித்து கூறும் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும். அதனாலே யூடியுப் அலைவரிசையாளர் ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்படுவார் என ஏற்கனவே அறிவித்திருந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அடிப்படை நாகரிகம் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் இன்று (நேற்று) கைது செய்யப்படுவது யூடியுப் அலைவரிசையாளர் ஒருவர் அறிந்துள்ளார்.அவருக்கு இது எப்படி தெரியும். அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் அவருக்கு சில துப்புகளை கொடுத்திருக்கலாம். இதுதானா அரசாங்கத்தின் புதிய கலாசாரம் என கேட்கிறோம்.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்கவோ இந்த நாட்டின் தலைவராக இருந்த வேறு யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால் அதுதொடர்பில் பீ. அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து, அவரை நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தால், அவரது சட்டத்தரணிகள் அதுதொடர்பில் செயற்பட்டு பிணையில் எடுக்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
இதுதான் சாதாரண நடைமுறை. இதனைவிடுத்து, நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவரை வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைத்து, பின்னர் கைது செய்வது முறையான நடவடிக்கையல்ல.
அவருக்கு எதிராக பீ. அறிக்கை தாக்கல் செய்திருக்கலாம். நாட்டின் முன்னாள் தலைவர் என்றவகையில் ஒரு அடிப்படை நாகரிகம் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால், அதுதொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்பட்டு, பின்னர் அவரை கைதுசெய்வது தொடர்பில் நீதிவான் தீர்மானித்திருக்கும்.
அவ்வாறு எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைத்து, அங்கு கைது செய்யப்படுகிறார்.
அதுவும் அவர் இவ்வாறு கைது செய்யப்படுவதை யூடியும் அலைவரிசையாளர் ஒருவர் முன்னதாகவே தெரிவித்திருக்கிறார் என்றால், ரணில் விக்ரமசிங்கவின் கைது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும் என்றார்.