இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து அவர் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க பல விடயங்களை அறிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வியாழக்கிழமை (10) சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதன்படி, அவர் வௌியிட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களுடன் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.