ரணில் - ராஜபக்ச அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் அரச சேவை பல பொதுவான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காடடியுள்ளார்.
இதேவேளை, அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் வரை விசேட கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (02-03-2023) அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் கூட்டு ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
"எங்கள் அனைவரின் அடிப்படை வேண்டுகோள், எங்களுக்கு 20,000 ரூபாய் விசேட உதவித்தொகை வேண்டும். சம்பளம் அதிகரிக்கப்படும் வரை அதனை வழங்க வேண்டும்.
அரச ஊழியர்களின் மாதச் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதாக இல்லாத நிலையில், வங்கிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளதோடு பாரியளவில் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையினல் ஈடுபட்டு பிரச்சினைக்குத் தீர்வினைப் பெறவுள்ளோம்.
நாங்கள் அனைவரும் கூட்டாக இரண்டு அல்லது மூன்று பாரிய நடவடிக்கைகளை தெரிவு செய்துள்ளோம் என்பதையும், ரணில் - ராஜபக்ச அரசாங்கத்திற்கும் ரணில் - ராஜபக்ச அரசாங்கத்திற்காக குரைக்கும் நாய்களுக்கும் நாங்கள் நிச்சயமாக அந்த நடவடிக்கைகளுக்கு செல்வோம் என்பதையும் நாங்கள் கூற விரும்புகிறோம்.” என தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான வரிச் சட்டத்தை திருத்தக் கோரி, கடந்த முதலாம் திகதி நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.