ரணில் வழக்கு விசாரணையில் ; வீதியில் ஒன்று கூடியவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் கூடியிருந்த நபர்களின் அடையாளத்தை வெளிபடுத்தி அவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திற்குள் நுழைய தடை
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் பலரும் கூடியிருந்தனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு செல்லும் நெடுஞ்சாலைகள் தடைபடும் வகையில் பல்வேறு நபர்களை ஒன்று திரட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுத்ததாக சுட்டிக்காட்டி, ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.