அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்
தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதன் மூலம் மக்களை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், அதைத் தாங்க முடியாத அளவுக்கு மக்கள் மாறிவிட்டனர் எனவும், இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அரசாங்கம் தன் நலனுக்காகவே செயல்படுகிறது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (06-09-2022) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வரிகளைப் பயன்படுத்தி அமைச்சர்களுக்கு நிவாரணம் வழங்கவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்கவுமே இது முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொண்ட ஒப்பந்தத்தை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இரகசியமாக கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்களுக்கு நாட்டு மக்களால் இழப்பீடு வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தனிப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கைகோர்த்துசெயற்பட்டதாலேயே தோல்வியடைந்ததாகவும், இன்றும் அவ்வாறே நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.