இவர்களின் ஆணையால் ராஜபக்ஷாக்கள் பதவி விலக்கப்படுவர்!
இலங்கையில் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக சுதந்திரமான பலம் வாய்ந்த ஒரு சட்ட கட்டமைப்பை உருவாக்க எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
30 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷாக்கள் மக்கள் ஆணையால் பதவி விலக்கப்படுவர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பு பேரணியின் மூன்றாம் நாள் நேற்று (28-04-2022) கலிகமுவையில் ஆரம்பமானது.
இதன் போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தது,
ராஜபக்ஷ குடும்பம் 30 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளது. தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள் மற்றும் நிதி என்பவற்றை கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு இவ்வாறு வக்குரோத்தடைந்துள்ளது.
ஊழலையும் மோசடிகளை ஒழிப்பதற்காக சுதந்திரமான பலம் வாய்ந்த ஒரு சட்ட கட்டமைப்பை ஸ்தாபிக்க எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அதனை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அரசியலமைப்பின் ஊடாக ஸ்திரமானதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கொள்ளையர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் இந்நிலைப்பாடு மாறாது.
மக்களின் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கும் பொறுப்பு, முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவிடம் (Sarath Fonseka) கையளிக்கப்படும்.
வேறு எவருடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த இரகசிய ஒப்பந்தமும் இல்லை. நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுடனயே எமது ஒப்பந்தம். நாட்டை குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடையச் செய்துள்ள ராஜபக்ஷக்கள் மக்களை ஆணையுடனேயே பதவியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த பேரணி இன்று வெள்ளிக்கிழமை (ச்29-04-2022) தனோவிடவிலிருந்து யக்கல வரையும் , நாளைமறுதினம் சனிக்கிழமை யக்கலையிலிருந்து பேலியகொடையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.