இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த அதிகரிப்பினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது பணவீக்கம் 9 சதவீதத்தை நோக்கி செல்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் செலவு செய்வதற்கான பணப் புழக்கத்தை குறைக்க வட்டி வீதங்களை அதிகரிப்பதாக மத்திய வங்கி தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.
பொருளாதார வளர்ச்சி
இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியும் அபிவிருத்தியும் மேலும் கீழ்நோக்கியே செல்லும். பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீம் எனக் கூறப்பட்டாலும், அதில் 0.7 சதவீத வரி வருமானமே உள்ளது. இது பலருக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தரவுகளை சரியாக பகுப்பாய்வு செய்து பார்த்தால், இந்த வரிகளின் ஊடாகவே பொருளாதாரம் பாரியளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக காட்டப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது.
இதனால், எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியும், அந்த வளர்ச்சியின் பலன்கள் மக்களை சென்றடைவதும் மேலும் தாமதமடையும் என்பதே எனக்கு தெரிகிறது என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.