இலங்கை வானிலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
நாட்டில் மழையுடனான வானிலை நாளைய தினம் (01-10-2023) குறைவடையும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனினும், இன்றிரவு மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்துவரும் கடும் மழையுடன் களனி கங்கையின் நீர் மட்டம் ஹங்வெல்ல பிரதேசத்தில் உயர்வடைந்துள்ளது.
குறித்த பகுதியில் எதிர்வரும் மணித்தியாலங்களில் அதிக மழை பெய்தால் அங்கு வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்படலாம் எனவும் நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அத்தனகலு ஓயாவை அண்டிய கம்பஹா, மினுவாங்கொடை, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் தற்போது காணப்படும் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், களு கங்கையின் கிளை ஆறு ஒன்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மில்லகந்த பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் புளத்சிங்கல மொல்கவர வீதியில் உள்ள தாழ் நில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், களுகங்கையின் நீர்மட்டம் புட்டுபாவுல - அலகாவ மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இரத்தினபுரியின் எலபாத்த, கரங்கொட, கினிஹிரிய மற்றும் மகுர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.