பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதி அநுரவை கைது செய்க; CID இல் முறைப்பாடு
இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு CID இல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு கோரி, பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் இன்று (2026.01.19) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
பிவிதுரு ஹெல உறுமயவின் இளைஞர் செயலாளர் குமார ராஜரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டில் ,
2026.01.16 அன்று யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் பின்வரும் கருத்தை வெளியிட்டிருந்தார் .
ஜனாதிபதியின் இந்த அறிக்கையானது நாட்டின் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இக்கூற்றின் ஊடாக, வடக்கிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த மதத்தலங்களுக்கு வழிபடச் செல்லும் இந்நாட்டின் பௌத்த மக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தவும், அதன் மூலம் வடக்கிற்கு வரும் பௌத்த மக்கள் மீது கடுமையான வெறுப்பைத் தூண்டவும் ஜனாதிபதி திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளார்.
இதன் காரணமாக வடக்கிற்கு யாத்திரை செல்லும் பௌத்தர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், இந்த அறிக்கையின்படி, வடக்கிலிருந்து பல இந்து ஆலயங்களைக் கடந்து கதிர்காமத்திற்கு வழிபடச் செல்லும் தமிழ் மக்கள் தொடர்பில் தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியிலும் வெறுப்புணர்வுகள் ஏற்படக்கூடும்.
நாட்டின் தென்பகுதியில் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்களைக் கடந்து வடக்கிலுள்ள மடு தேவாலயத்திற்கு யாத்திரை செல்லும் கத்தோலிக்க மக்கள் தொடர்பிலும் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பினால் பிரச்சினைகள் எழக்கூடும்.
அதன்படி, ஜனாதிபதியின் இந்த உரை காரணமாக இந்நாட்டின் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க ஆகிய அனைத்து மதக் குழுக்களுக்கிடையிலும் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இருப்பினும், அநுர குமார திசாநாயக்க அவர்கள் தற்போது நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிப்பதனால் அவருக்கு ஜனாதிபதிக்குரிய விடுப்பாதிசாரம் (Immunity) உண்டு என்பதை நாம் அறிவோம்.
எனவே, அவரது பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அநுர குமார திசாநாயக்க அவர்களைக் கைது செய்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.