மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகள், விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பயிர்ச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது விவரங்களை உடனடியாக உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகளில் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இரண்டு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்ச்செய்கைகள் தொடர்பான அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு காப்புறுதிச் சபை மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் விவசாயிகளின் முழுமையான விபரங்கள் கிடைத்தவுடன், மிகக் குறுகிய காலத்திற்குள் இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆரச்சி கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் நேரில் சென்று சேதங்களை மதிப்பீடு செய்வார்கள் என தெரிவித்தார்.
பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு இழப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.