தென்னிலங்கையில் பொலிஸார் திடீர் சோதனை ; முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
உடற்பிடிப்பு நிலையம் (மசாஜ் நிலையம்) என்ற போர்வையில் களுத்துறை அளுத்கம நகரில் இயங்கி வந்த இரண்டு பாலியல் தொழில் விடுதிகள் மீது களுத்துறை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது விடுதிகளை நிர்வகித்த முகாமையாளர் ஒருவர் மற்றும் 12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
அளுத்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட நகரப் பகுதியில் நேற்று (9) இரவு இந்த இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதிகளை நிர்வகித்த குற்றச்சாட்டில் 57 வயதுடைய அளுத்கம பகுதியைச் சேர்ந்த முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் 23 முதல் 43 வயதுக்கு இடைப்பட்ட 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் தல்கஸ்வல, மத்தக, எல்பிட்டிய, கிரியெல்ல, நவந்துடுவ, உடகரவிட்ட, வாத்துவ, மொரட்டுவ, பதுளை, மாஸ்பொத, நுவரெலியா மற்றும் பிபில உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அளுத்கம காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.