கொள்ளுப்பிட்டியில் அதிரடி சோதனை ; ஜமைக்கா நாட்டவர்கள் நால்வர் கைது
கொழும்பு - கொள்ளுப்பிட்டிப் பகுதியில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஜமைக்கா நாட்டவர்கள் நால்வரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (13) அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (12) கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலும் சிறப்பங்காடி வளாகம் ஒன்றிலும் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய தீவிர சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 48 வயதுடைய இரு ஆண்களும், 43 மற்றும் 52 வயதுடைய இரு பெண்களும் ஆவர்.
சந்தேகநபர்கள் நால்வரும் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.