இனவாதக் கருத்து;லக்ஷ்மன் கிரியல்ல மன்னிப்புக் கோர வேண்டும்
லக்ஷ்மன் கிரியல்ல வெளியிட்டதாகக் கூறப்படும் இனவாதக் கருத்துக்களை உடனடியாக மீளப் பெற்று, பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சண் குகவரதன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்று மாலை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், லக்ஷ்மன் கிரியல்லவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டமும் நீதியும் உரிய முறையில் செயற்பட்டு வரும் நிலையில், தரம் தாழ்ந்த கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகவும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் இனவாத, மதவாதக் கருத்துக்களைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டில் இனவாத அல்லது மதவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது எனக் குறிப்பிட்ட சண் குகவரதன், ஜனாதிபதி அனைத்து இலங்கை மக்களினதும் பொதுவான தலைவராகச் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன, மத நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையிலான கருத்துக்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.