ருமேஷ் தரங்கவின் பெயரில் வீதி ; சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்
இலங்கை ஈட்டி எறிதல் சாம்பியனான ருமேஷ் தரங்கவின் வீட்டுக்குச் செல்லும் வீதியை சுமார் 80 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய மில்லனிய பிரதேச சபை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை, நேற்று(13) நடைபெற்ற பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் அதன் தவிசாளர் வெளியிட்டார்.

கோரிக்கை
இதன்போது, விளையாட்டுத் துறையில் ருமேஷ் தரங்க பெற்றுள்ள சாதனைகளைப் பாராட்டும் வகையில், குறித்த வீதிக்கு “ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்க” எனப் பெயரிட வேண்டும் என்று சபை உறுப்பினர் கயான் சம்பத் முன்மொழிந்தார்.
அதேவேளை, குறித்த வீதியை உயர்தரத்தில் தார் கம்பளம் இட்டு அபிவிருத்தி செய்ய வேண்டும் என முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் சஞ்சீவ குலதிலக்க வலியுறுத்தினார்.
வீதியை கொங்கிறீட் இட்டு அமைக்கும் யோசனைக்கு சபை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தார் கம்பளம் இட்டு அபிவிருத்தி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் வீரரின் வீட்டுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.