இனவாதம் வெளிப்படுத்தவில்லை ; விமலுக்கு கனடியத் தமிழர் பேரவை பதில்
இன, மதவாதக் கருத்துக்களை தெரிவித்து மக்களை ஏமாற்ற நினைப்பதை தவிர்த்து முறையான முன்னேற்றகரமான அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் குமார் இரத்தினம் தெரிவித்துள்ளார்.
நாம் ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் இனவாத பிரிவினைவாத கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என்று விமல் வீரவன்ச அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதிக்கு கனடிய தமிழர் பேரவை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டியே விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் தெரிவித்துள்ள விடயமானது,
அதில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனடிய தமிழர் பேரவை ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் இனவாத பிரிவினை வாத கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுடன் நீதி மற்றும் நியாயமான தீர்வுகளை முன்வைத்தே அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் இன, மத வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் தங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் ஒரு சமூகத்தில் இணைந்து வாழ முடியும் என்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக, இனவெறி மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் கருத்துக்கள் மக்களின் உணர்ச்சிகளைக் கையாளவும், சமூகங்களைப் பிளவுபடுத்தவும், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்யவும் ஆயுதமாக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த தந்திரோபாயம் காலகாலமாக தவறான புரிதல்களை நிலைநிறுத்தியுள்ளது என்பதோடு அவநம்பிக்கையை வளர்த்து, இலங்கையின் சமூக மற்றும் கலாசார ஒற்றுமைக்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.