ஷிரந்தி ராஜபக்ஷவின் மருத்துவப் பரிசோதனை தொடர்பில் வலுக்கும் கேள்வி
ஷிரந்தி ராஜபக்ஷவைச் சிறைக்காவலில் வைக்கும்போது, நீதிமன்றம் அவரை அவரது வழக்கமான கண் மருத்துவரிடம் பரிசோதனைக்காக 'நவலோக்க' வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ஒரு கைதிக்கு எந்த மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதைச் சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்கும் அளவுக்கு அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறைவாசம் என்பது தண்டனை அல்ல
கொழும்பில் வெள்ளிக்கிழமை (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஷிரந்தி ராஜபக்ஷவைச் சிறைக் காவலில் வைக்கும் போது, நீதிமன்றம் அவரை அவரது வழக்கமான கண் மருத்துவரிடம் பரிசோதனைக்காக 'நவலோக்க' வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவைப் புறக்கணித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை அந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லத் தவறியுள்ளனர். ஒரு கைதிக்கு எந்த மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதைச் சிறைச்சாலை அதிகாரிகளே தீர்மானிக்கும் அளவிற்கு அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
ஷிரந்தி ராஜபக்ஷவின் சிறைவாசம் என்பது ஒரு தண்டனை அல்ல, அது வெறும் பிணைக்காவல் மட்டுமே என்பதைச் சிறைச்சாலை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவைச் சிறைச்சாலை நிர்வாகம் வேண்டுமென்றே புறக்கணிப்பது, அரசியல் பிரமுகர்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் ஒரு மனிதாபிமானமற்ற அணுகுமுறை.
நீதிமன்ற உத்தரவுக்கு மேலாக யாரும் இல்லை என்றும், சிறைச்சாலை அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுவதால், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும்.
மேலும், இது வெறும் சிறைவாசம் தொடர்பான விவகாரம் மட்டுமல்ல, மனித உரிமைகள் மற்றும் ஒரு கைதியின் அடிப்படை மருத்துவ உரிமைகள் மறுக்கப்படும் செயலாகும் என்றார்.