தமிழர் பகுதியில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை
மட்டக்களப்பு - புளியந்தீவில் 11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 37 வயதுடைய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியை கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பாலியல் துஷ்பிரயோகம்
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், அரச சார்பில் அரச சட்டத்தரணி ஆஜராகி வாதாடினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியால் 'பெரியப்பா' என அழைக்கப்படும் குறித்த நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார்.
இதன்படி, சிறுமியை பெற்றோருக்குத் தெரியாமல் கவர்ந்து சென்ற குற்றத்திற்காக 5 ஆண்டுகளும், பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றத்திற்காக 15 ஆண்டுகளுமாக மொத்தம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதனைச் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் குற்றவாளிக்கு 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.