இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் ராணி; வாங்க முன்வந்துள்ள நாடு!
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று குறித்த தொகைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், குறித்த நீலக்கல் 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை Queen of Asia என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய இந்த நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியிருந்தன .
இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னதாக விலைமனு கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்த நிலையில், சீனாவும் இந்த போட்டியில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதேவேளை வொஷிங்டன் நகரில் உள்ள நூதனசாலை ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக அமெரிக்காவும் குறித்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
310 கிலோகிராம் எடைகொண்ட ஆசியாவின் ராணியென அழைக்கப்படும் இந்த நீலக்கல், இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையிலேயே குறித்த நீலக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் வாங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.